வடக்கு மக்கள் செய்த நன்றியை ஒரு போதும் மறக்க மாட்டேன்: மைத்திரி

யாழ்ப்பாணம், பெப்.21

நான் வடக்கு மக்கள் செய்த நன்றிக்கடனை என்றும் மறக்க மாட்டேன் அவர்களை என்றும் என் நெஞ்சில் தாங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.கரவெட்டி கொலின் விளையாட்டு கழகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மைத்திரிபால சிறிசேன கூறியதாவது,
நாட்டு மக்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் இக்கட்டான காலகட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக அன்னப் பட்சி சின்னத்தில் போட்டியிட்டபோது
வடபகுதி மக்கள் எனக்கு 95 சத வீதத்துக்கு அதிகமான வாக்குகளை வழங்கி என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள்.

நான் வடக்கு மக்கள் செய்த நன்றிக்கடனை என்றும் மறக்க மாட்டேன் அவர்களை என்றும் என் நெஞ்சில் தாங்கியுள்ளேன். இலங்கை ஜனாதிபதிகளில் வட பகுதி மக்களுக்காக அதிகமான அபிவிருத்திகளை வழங்கிய ஜனாதிபதி நான்தான். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த 5 வருடங்களில் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினை ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாது ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இருந்து அங்கஜனை தமிழ் மக்களுக்கான பிரதிநிதியாக உரிய கொளரவத்தை வழங்கினேன்.

யாழ்ப்பாணம் சிறந்த விவசாயிகளைக் கொண்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்ற நிலையில் நான் ஜனாதிபதியாக இருந்தபோது அங்கஜனுக்கு விவசாய பிரதி அமைச்சை வழங்கினேன். யாழ்ப்பாண விவசாயிகள் விவசாயத்தில் சளைத்தவர்கள் அல்ல எவ்வாறான தடைகள் வந்தாலும் விவசாயத்தில் சிறந்து விளங்கினார்கள்.

1980களில் அப்போதைய நாட்டின் பிரதம மந்திரியும் எனது தலைவியுமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் வந்தபோது இங்குள்ள பெண்கள் மிளகாயில் மாலை அணிவித்தார்கள்.

வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வரும் நிலையில் அரசாங்கம் என்ற நீதியில் அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாற்றில் யாழ்.தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வரலாற்று பாராளுமன்ற உறுப்பினராக அங்கஜன் இராமநாதன் விளங்குகிறார்.

ஆகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கும் நாட்டின் சிறந்த அரசியலை கலாசாரத்தை உருவாக்குவதற்கு  யாழ்.மக்கள் அணிதிரள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *