
யுத்தத்தின்போது தாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகின.
இந்த அறிக்கை தங்களிற்கு எதிராக 8 யுத்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தனியாக சென்று அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாக அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு யுத்தத்தின் போது தாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது.
தான் அவ்வேளை கடற்படையிலிருந்ததாகவும் வடபகுதிக்கு உதவிப்பொருட்களுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்றன. ஐ.நா. உட்பட சர்வதேச சமூகம் இலங்கையை இதற்காக பாராட்டின.
அத்தோடு, முல்லைத்தீவு அரசாங்க அதிபராகயிருந்த, மெல்டா சுகுமார் ஒருமுறை மூன்று மாதங்களிற்கு அவசியமான உணவுப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்த போதிலும் மங்கள சமரவீர யுத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
மேலும் புரணகம ஆணைக்குழுவுடன் ஆறு சர்வதேச அளவில் பெயர் பெற்ற யுத்த குற்ற நிபுணர்கள் இணைந்து, தாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர்.
அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.