
யாழ்ப்பாணம், பெப்.21
எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வடக்கு மாகாணத்தில் முன்பள்ளிகள் செயற்படாது என முன்பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போராட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,
மாகாண சபை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு முன்பள்ளிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதன் பின்னர் முன்பள்ளி டிப்ளமோ மற்றும் பொதுப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதுவும் ஒரு தடவை மட்டுமே.
பின்னர் மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இந்த கொடுப்பனவு தற்போது நிலவும் விலைவாசிகளின் அதிகரிப்பு மத்தியில் போதுமா? முன்பள்ளியில் தான் குழந்தை ஒன்று தனது கல்வியை ஆரம்பிக்கிறது.
ஆனால், ஆசிரியர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இது தவிர ஓய்வுதியம் இல்லாமல் 50 வயதில் ஓய்வு பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றும் இல்லை. ஆகவே எமது கொடுப்பனவு 25 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் இல்லை என்றால் வடக்கு மாகாணத்தில் முன்பள்ளிகள் செயற்படாது என்றனர்.