பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்! – கல்முனை மாநகர முதல்வர்

பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும். மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

இந்த கையெழுத்து போராட்டமானது இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்வதற்காகவே ஆகும். 1979 ஆண்டு பயங்கரவாத சட்டம் இலங்கையில் உருவாக்கப்பட்டது.

அது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மனித உரிமை பட்டயத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிராக கூறப்பட்ட சட்டமாகும். மனித குலத்திற்கு தேவையற்றதாகும்.

இயற்கை நீதி விதி கோட்பாட்டிற்கு எதிரான ஒரு சட்டம்.இந்த சட்டத்தின் ஊடாக ஒருவர் கைது செய்யப்பட்டால் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எந்த வாய்ப்பும் அவருக்கு கிடையாது எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *