இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வது ஒரு கேலிக்கூத்து – யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு..!samugammedia

அரசாங்கமானது வடபகுதி கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை யோசிக்காது முடிவு எடுக்கிறது. நாங்கள் எத்தனையோ தடவைகள் அழிவை சந்தித்திருக்கிறோம். அந்த அழிவுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எவரும் எந்த அனுதாபமும் தெரிவிக்கவில்லை. என யாழ் மாவட்ட கிராமிய  கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின்  சம்மேளன பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் பின்னர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அண்மையில் எமது பிரதேசத்தில் எல்லை தாண்டி அத்துமீறி உள்நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் சொத்துக்களையும், எமது கடல் வளங்களையும் அழித்து நாசம் செய்த இந்திய படகுகளில் சில படகுகள் எமது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அந்த படகுகளும் அதில் வந்த தொழிலாளர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 40பேர் அண்மைக்காலமாக பிடிபட்டவர்கள், சிறையில் இருந்த அனைவரும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம் மிகவும் மனவருத்தமாக உள்ளது. 

ஒரு உயிர் கஸ்டப்படுவதை நாங்களும் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால் பிடிபட்டு இருந்தவர்கள்  40 பேர். வடபகுதியிலே கிட்டத்தட்ட 7000 மேற்பட்ட தொழிலாளர்கள்  தொழில் செய்கின்ற இடத்திலே, அத்தனை பேரின் குடும்பங்களும் பசியால் வாடிக்கொண்டிருக்கின்ற இந்நேரம், அத்துமீறி வருகின்ற தொழிலாளர்கள் எமது நாட்டின் வளங்களையும், வாழ்வாதாரத்தையும், தொழில் உபகரணங்களையும் அளித்து சென்று அவர்களுடைய வாழ்வையும் சீரழித்துள்ளார்கள். இந்நிலையிலே எங்களுடைய வாழ்வை சீரழித்து தங்களின் வளங்களை பெருக்க வேண்டுமென்று அநியாய செயலை செய்கின்ற அவர்களை விடுதலை செய்வதென்பது எமக்கு மிகவும் மனவருத்தத்தை தருகிறது. 

இது எமது உரிமையை பறிக்கின்ற ஒரு செயல். அரசாங்கமானது வடபகுதி கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை யோசிக்காது முடிவு எடுக்கிறது. நாங்கள் எத்தனையோ தடவைகள் அழிவை சந்தித்திருக்கிறோம். அந்த அழிவுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எவரும் எந்த அனுதாபமும் தெரிவிக்கவில்லை. நாங்கள் பல தடவை எல்லோரிடமும் முறைப்பாடு செய்து இருக்கிறோம். இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த செயற்பாடு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற ஒரு கேலி கூத்து. இதனை நாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. எனவே நாங்கள் இப்போது போராடவேண்டிய நிலையில் உள்ளோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *