கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ள புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜீ. விஜேசிறிக்கு இன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள திணைக்களப் பிரிவு பிரதானிகள் உட்பட புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர் அருள்தாசன் உட்பட கல்வித் திணைக்கள அதிகாரிகள், புத்தளம் மாவட்ட சர்வத மத இணைத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது புத்தளம் மாவட்ட செயலகத்தின் செயலாளராக கடமைப் பொறுப்பேற்று எட்டு மாதங்களில் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் மாவட்ட செயலாளரின் சேவைகளை நினைவுகூர்ந்த அதிகாரிகளும், சமயத் தலைவர்களும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அத்துடன், புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தளம் நகர சபை, அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களினதும், பாதுகாப்பு தரப்பினரதும் உதவிகளைப் பெற்று வெள்ளநீரை வெளியேற்றவும், கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தமை பற்றியும் இங்கு ஞாபகப்படுத்தப்பட்டது.
இதன்போது , புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட சுந்தரராமக் குருக்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோர் புத்தளம் மாவட்ட செயலாளரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம். ரபீக் நினைவுச்சின்னம் வழங்கினார்.
