“நூறு கோடி மக்களின் எழுச்சி (One Billion Rising)” கொண்டாட்ட நிகழ்வு புத்தளத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் இன்று புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளர் ஜூவைரியா முஹைதீன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.ஏ.வை.ஆர். ஜயதிலக, சிறுவர் – பெண்கள் உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், புத்தளம் பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஜயகொடி உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நூறு கோடி மக்களின் எழுச்சி (One Billion Rising) கொண்டாட்டமானது வன்முறையற்ற வாழ்வினைக் கட்டியெழுப்ப பாடுபடும் பெண்ணியவாதிகள் , சமூக ஆர்வலர்கள் , சமூக மாற்றச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இது இலங்கையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
” பெண்களினதும், பூமியினதும் உடல்கல் மீது இன, மத, அரசியல், சமூக, சந்தை பொருளாதார ஆதிக்கங்களால் நிகழ்த்தப்படும் யுத்தங்களுக்கு எதிராக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட பெண்கள் “பெண்களின் மேம்பாடு” எனும் தலைப்பில் ஓவியங்களை வரைந்து பரிசுகள், சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

