ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான உண்மையை அரசு மறைக்கிறது: ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு, பெப்.22

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவான விடயமாகும். இவ்வாறு வெளிப்படுத்துவதால் அது அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அவரது அறிக்கையின் விபரம்;

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் மேலேலுகிறது. இந்த அறிக்கைக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் இருந்தும் இந்த விடயமே தெளிவாகிறது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பான மனுவில் ஷானி அபேசேகர முன்வைத்துள்ள கருத்துகள் தொடர்பாக ஆராய்கின்ற போது,அரசாங்கம் வழமை போன்று உண்மையை மறைத்து பொய்யை சமூகமயப்படுத்துவதற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த அறிக்கையை சமர்பிப்பதற்கான அடிப்படையானது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட பெயர் குறிப்பிடாத மனுவாகும் என ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அபேசேகர அந்த மனுவில் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும். தன்னுடைய விசாரணை நடவடிக்கைகளுக்கு புலனாய்வு அதிகாரிகளின் உதவி முறையாக கிடைக்காமல் போனமை,புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை வேண்டுமென்றே தடுப்பது மற்றும் விசாரணையை நிறுத்தக் கோரி அழுத்தம் கொடுத்த விவரங்கள் தொடர்பாக விரிவாக கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தின் உண்மை விவரங்களை அரசாங்கம் வேண்டுமென்றே மறைக்கிறது என சங்கைக்குரிய காதினல் அவர்கள் கூட கூறுகிறார்.இன்று அரசாங்கத்தை மட்டுமல்ல சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்ப முடியாது என காதினல் தெரிவித்துள்ளார்கள்.

உண்மையான குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவான விடயமாகும். இவ்வாறு வெளிப்படுத்துவதால் அது அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

அபேசேகரவின் மனுவின்படி,தேசிய புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு சேவையின் சில உறுப்பினர்கள் மற்றும் சஹ்ரானின்
உறுப்பினர்களுக்குமிடையிலான தொடர்பு உள்ளது என்பதும் அம்பலமாகியுள்ளது. சஹ்ரானை கைது செய்ய உதவாமல் சில வழக்குகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவரை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட்டு மற்றும் அது தொடர்பில் தகவல் அறிந்த ஷானி அபேசேகர உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் சட்டத்தை அமுல்படுத்த முயன்றது , ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி பற்றிய உண்மைகளை என்றென்றும் புதைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

அதே போல்,ஷானி அபேசேகர மற்றும் ஏனைய அதிகாரிகள் தற்போது எதிர்நோக்கும் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் குறித்தும் நாங்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவதுடன் அவர்களின் உயிரின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு என்பதையும் வலியுறுத்துகிறோம்.

நாட்டிற்கு முக்கிய பங்காற்றுகின்ற அரச புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் கௌரவம் இவ்வாரானவர்களின் செயற்பாட்டினால் இல்லாமலாக்கப்பட்டதா என்று உரிய விசாரணை நடத்துவதும் அதன் மூலம் கௌரவத்தை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *