இலங்கையில் அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயற்சிப்பது தெளிவாவதாக பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான முரண்பாடுகள் மக்களுக்குச் சிறந்த சேவை செய்வதற்கான நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டவை அல்லவென அமைப்பின் நிறைறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தனிநபர்களின் அரசியல் நலன்களை மேம்படுத்த முயற்சிப்பதை தவிர்த்து நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடுகள் மாத்திரமன்றி அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகிறது.
மக்களுக்கு சேவையாற்றுவது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, அரச வளங்களை நிர்வகித்தல், ஊழல் அல்லது மோசடி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது போன்றவற்றில் எந்தவொரு சர்ச்சையும் கவனம் செலுத்தவில்லை.
கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.