ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் இந்து பெளத்த சங்கத்தின் தலைவருமான மகேந்திரராசா மயூரதன் மீது வவுனியா நகரசபையின் செயலாளர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் நி்கழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,
குறித்த இணைப்பாளரது சமூகவலைத்தளமான முகநூலில் 2022ம் ஆண்டு நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் பொது மயானத்தின் கணக்கறிக்கையில் 2 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை காட்டுகின்றது என்று பதிவொன்றை மேற்கொண்டிருந்தார், இப்பதிவானது நகரசபைக்கு அவதூறு பரப்பும் செயல் என தெரிவித்தே வவுனியா நகரசபை செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக நகரசபையினரிடம் வினவியபோது
வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் 2022 ம் ஆண்டு மின்சாரம் மூலம் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில் புகை போக்கி உடைந்து வீழ்ந்ததாகவும், அதனால் அயலில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தகனம் செய்யப்படும் புகை, குடியிருப்புக்குள் நுழைவதால் சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக நகரசபைக்கு முறையிட்டதை அடுத்து குறித்த புகைபோக்கியை ஏறக்குறைய 19இலட்சம் ரூபாய் செலவு செய்து புனரமைத்ததாகவும் தெரிவித்ததுடன், நகரசபை நிதியானது இலாப நோக்கத்துடன் மட்டும் செலவு செய்யப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் நலன்கருதியும் நிதி ஒதுக்கீடுகள் செய்வதாகவும் தெரிவித்திருந்தனர்
நகரசபையின் வேலைகள் தொடர்பான சந்தேகங்கள் பொதுமக்களுக்கு இருப்பின் நேரடியாக நகரசபையை நாடி ஆவணங்களை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மயூரதன் கருத்து தெரிவிக்கும் போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான போதிய ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் தான் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் குறித்த பதிவானது ஐக்கியதேசிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட பதிவாக உள்ளதால் இப்பதிவானது அக்கட்சியின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அவர்கட்கு இது தொடர்பான முறைப்பாட்டை நகரசபை எடுத்துச்செல்லவுள்ளதாகவும் அறியப்படுகிறது.