டேவிட் இக்னேசியஸ்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தீங்கு தரும் சீமைக்கருவேல மரங்களை அழிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபை அறிவித்தது. ஆனால், அவர்கள் தீங்கு தரும் சீமைக்கருவேல மரங்களுக்கு பதிலாக, சூழலுக்கு உகந்த, மருத்துவக் குணம் கொண்ட, மண்ணரிப்பை தடுக்கக்கூடிய கருவேல மரங்களை அழித்து வருகிறார்கள் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தென் கிழக்கு பல்கலைக்கழகதின் மூத்த விரிவுரையாளரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான அம்ரிதா ஏயெம் கூறுகையில் “கருவேலம், சீமைக் கருவேலம் ஆகிய மரங்கள் இரண்டையும் அனேகர் ஒரே மரம் என நினைக்கின்றனர். முன்னையது Acacia nilotica, இயற்கையோடு இசைந்த மரம். மருத்துவ குணங்கள் கொண்டது. நாங்கள் பாதுகாக்க வேண்டி மரம். பின்னையது Prosopis juliflora , அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம், அழிக்கப்பட வேண்டியது. சீமைக் கருவேல மரங்களே எங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருக்கின்றன. கருவேல மரங்கள் அல்ல.இந்த சீமைக் கருவேல மரங்கள் மட்டக்களப்பு, புதுப்பாலம் பிரதேசத்தில் அடர்ந்து காணப்படுகின்றன.
ஆனால், சீமைக்கருவேல மரங்கள் என நினைத்து, கருவேல மரங்களை மட்டக்களப்பு மாநகராட்சி அழித்து வருகிறது.

கடந்த வாரம் மட்டக்களப்பில் கெடுதல் தரும் சீமைக்கருவேல மரங்கள் இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டதாக விடியோக்களும், முகநுால் குறிப்புக்களும் இடம்பெற்றிருந்தன. எனது நீண்ட களச்செயற்பாட்டு, கல்வி, ஆய்வு அனுபவங்களில் அங்கே இதுவரை எந்த சீமைக் கருவேல மரங்களும் காணப்பட்டிருக்கவில்லை என்பதும், கருவேல , புங்கை, பார்க்கின்சோனியா போன்ற மரங்கள் மட்டும்தான் காணப்பட்டன என்று தெரிந்து, இன்று களத்திற்கு சென்று அதனை உறுதி செய்தேன். அழிக்கப்பட்டவை எமது இயற்கையாக எமது சுற்றுச்சூழலுக்கு இசைவாக்கப்பட்ட , மருத்துவகுணம் கொண்ட, மண்ணரிப்பை தடுக்கக்கூடிய Acacia nilotica என்ற கருவேல மரங்களே.
”சீமைக்கருவேல மரத்தை நினைத்துக்கொண்டு” விடியோவில் தெளிவாக ”கருவேல மரங்களை அழிப்பதாக” கூறிக்கொண்டு இயந்திரங்களினால் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். அத்துடன் அந்த மரங்களை அழிக்கும்போது கருவேல மரங்கள் இந்திய அமைதிகாக்கும் படையினர் ஆடு, மாடுகளுடன் கொண்டு வந்தது என்று சொல்லிக் கொண்டுதான் அழிக்கிறார்கள்.

உண்மையில் பார்த்தீனியம்தான் இந்திய அமைதிகாக்கும் படையினரின் ஆடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்த்தீனியம் மரம் அல்ல. அது சிறிய செடி. அத்துடன் சீமைக்கருவேல மரங்கள் 1953களில் அம்பாந்தோட்டையில் உவர்நிலங்களை வளப்படுத்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. உண்மையில் சுற்றுச்சூழல் விடயங்கள் ஆகக்குறைந்தது, அந்தத் துறையிலுள்ள செயற்பாட்டாளர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடிச் செய்ய வேண்டும். அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களின் கட்டுப்பாட்டு முகாமைத்துவம் என்பது மிகவும் சிக்கலானது. உயர் அதிகாரிகளில் குறைகளைக் காண்பதைவிட, உயர்அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறியவர்களே இதற்குரிய தீர்வாக அந்த இடங்களில் புங்கை போன்ற உப கண்டல், மற்றும் கண்டல் மரங்களை நடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
மட்டக்களப்பினதும், அம்பாறையினதும் உண்மையான அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்கள் பிரச்சினை இராட்சத தொட்டாச் சுருங்கியினாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பட்டிப்பளை, வெல்லாவெளி, மண்டுர் பகுதிகள் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரப்புறத்தின் முக்கிய பகுதிகளிலும் இந்த மரங்கள் படையெடுத்து வந்துகொண்டிருக்கின்றன. அழிக்கப்படவேண்டியவை இவை போன்ற தாவரங்களே.
மட்டக்களப்பு நகரத்தில் Prosopis juliflora என்ற அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம் காணப்படுகின்றது, அழிக்கப்படுகின்றது என்ற தகவல் சூழலியல் விஞ்ஞானத்திற்கும், மட்டக்களப்பின் சூழலியலிற்கும் கொடுக்கப்படும் பிழையான செய்தியும், அறிக்கையுமாகும்.
எனவே கேள்வி ஞானத்தாலும், ஞானமில்லாத வேகத்தாலும் நீண்டு நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி சாத்தியமில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும் என்று அவர் தெரிவித்தார்.