இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லை! அமைச்சரவையில் கலவரம்

நாட்டில் இஸ்லாமியர்கள் நீண்டகாலம் பின்பற்றும் சட்ட திட்டங்களில் செய்யக்கூடிய வகையிலான திருத்தங்களை முன்மொழிந்த நீதியமைச்சர் அலி சப்ரியின் பத்திரமொன்றுக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவையின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.

கடந்த ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், அவற்றில் செய்யக்கூடியவற்றை விளக்கிய அமைச்சரவைபத்திரமொன்றை நீதியமைச்சர் இதன்போது சமர்ப்பித்திருந்தார்.

சட்ட ரீதியான திருமணங்களுக்கான வயதெல்லையை 18 வருடங்களாக உயர்த்துதல், திருமணப் பதிவு ஆவணத்தில் மணப்பெண் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குதல், பலதார திருமணங்களை இல்லாதொழித்தல் மற்றும் காதி நீதிமன்ற முறைமையை அகற்றுதல் ஆகிய விடயங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென முன்னதாக வலியுறுத்தப்பட்டிருந்தன.

அவற்றில் பலதார திருமணங்கள், காதி நீதிமன்ற முறைமை ஆகியவற்றை நீக்கினால் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் சர்ச்சைகள் ஏற்படலாமென நேற்றுமுன்தினம் அமைச்சரவையில் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், அவற்றில் செய்யக்கூடிய திருத்தங்களை அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஆனால், நீதியமைச்சரின் இந்த கோரிக்கைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லையென்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்வது குறித்து பிரான்ஸில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள்.

அதில் அதற்கு அதிகபட்ச ஆதரவு கிடைத்தது. இங்கேயும் ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அந்த சட்டங்களில் சீர்திருத்தம் செய்யாமல் இருக்க முடியாது.

பலதார திருமணங்களை அனுமதிக்கவே முடியாது. இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பொதுவான சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பல தரப்புகளுக்காக பல சட்டங்கள் இருக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகர இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அமைச்சரவையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சிபாரிசுகள் கிடைத்த பின்னர் தேவையான திருத்தங்களை செய்யலாமென அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில இங்கு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களின் கலை, கலாசாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தங்களை செய்வதில் தவறில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இங்கு குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைகளையடுத்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சிபாரிசுகள் கிடைத்த பின்னர் இதில் திருத்தங்களை செய்யலாமென தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *