போர் குற்றம் தொடர்பில் அரசு உரிய பதில்கள் வழங்கவேண்டும்! – பொன்சேகா

போர் குற்றம் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில்கள் வழங்கவேண்டும். இதனை விடுத்து குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் ஒளிந்துக்கொண்டிருப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழல்கள் நிறைந்த ஆட்சியின் காரணமாகவே இன்று நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழல் மிக்கவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனினும் சாதாரண மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூலக்காரணமானவர் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதற்காக கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. போர்குற்றங்களில் இருந்து படையினரை விடுவிக்கவேண்டும்.

போர் குற்றச்சாட்டுக்களை இல்லையென்று கூறாமல், அதற்கு முகங்கொடுக்கவேண்டும்.

இந்த போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் போர் செய்தவர்கள் அல்லர்.

போர் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர்களே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே அவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்படவேண்டும். குற்றம் புரிந்தவர் இருந்தால், அவர் தேசிய மட்டத்தில் தண்டிக்கப்படவேண்டும்.

அவர் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டும்.

இதன் மூலம் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் போர் புரிந்த படையினரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளமுடியும்.

படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக போர் புரிந்தனர் என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாவர் என்பதை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

அவ்வாறு தமிழ் மக்கள் நினைத்திருந்தால், போர் முடிவடைந்த சில வருடங்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமக்கு அதிகப்படியான வாக்குகளை தமிழ் மக்கள் அளித்திருக்கமாட்டார்கள்.

எனினும் இதற்கு மாறாக சிலர் செயற்படுகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

இது தொடர்பில் விசாரணை செய்து உண்மையை கண்டறியவேண்டும்.

இதன் மூலம் நியதிகளின் அடிப்படையில் போர் புரிந்த படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இல்லாதொழிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *