
புத்தளம் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் அளவுகள் இதன்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதனை கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் தலைவர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி புத்தளம் மற்றும் மாதம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேற்படி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விலை அதிகரிப்பை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளை மறைத்து வைத்திருக்கலாம் என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே , இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
இதேவேளை , நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுடன் பொலிஸாரும் இணைந்து சோதனையிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.