
இலங்கை அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பினை வெளியிடுவதைவிட விடுத்து, தமிழினத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை வரவேற்க வேண்டுமென சட்டத்தரணியும், பயங்கரதவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பெரும்பாலான வழக்குகளில் முன்னிலையாகும் சட்டத்தரணியுமான கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் விடும் பட்சத்தில், சுமார் 400 தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு தமிழர் தரப்பு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற சூழலில், அதில் சாதகத் தன்மைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக 12 மாதங்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் பிணை வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட நன்மைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.