
உள்நாட்டில் நீதி கிடைக்காதபோது, சர்வதேசத்தை நாடுவதில் தவறில்லை. 1989ஆம் ஆண்டு நடந்த சிற்சில சம்பவங்களுக்கு அப்போதைய அரசு பொறுப்புக்கூறவில்லை என்று மஹிந்தவும் ஒருகாலத்தில் சர்வதேசத்தை நாடியுள்ளார்.
இவ்வாறு எதிரணி ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிரணி கொறாடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டு மக்கள் இன்று அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் நிவாரணம் வழங்கப்படுவதில்லை.சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸார் மற்றும் நீதித்துறைக் கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் பேசுவதற்கான உரிமை நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் உள்நாட்டில் நீதி கிடைக்காது என்று பேராயர் கருதுகின்றார்.
இது தொடர்பில் நாடாளுமன்றம் வெட்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல இந்த விவகாரம் தொடர்பில் என்ன செய்வது என்று நாடாளுமன்றம் ஊடாக ஆராயப்பட வேண்டும்.
1989 ஆம் ஆண்டு நடந்த சிற்சில சம்பவங்களுக்கு அப்போதைய அரசு பொறுப்புக்கூறவில்லை என்று கூறி தற்போதைய பிரதமர் அன்று ஜெனிவா சென்றார்.
இன்று மாற்றுவழி இல்லாமையால்தான் பேராயரும் சர்வதேசத்தை நாடுகின்றார். இதனால் எமது நாட்டுக்குத் தாக்கம் ஏற்படும். அதனால் நாடாளுமன்றம் ஊடாக வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். உள்நாட்டில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவதில் தவறில்லை என்பதையும் கூறியாக வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. எமது நாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. இந்த விவகாரத்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.-என்றார்.