தீவக பெண்கள் விவகாரம்: ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் கஜேந்திரன் சபையில் சாடல்

யாழ்ப்பாணம், பெப்.24

தீவகப்பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் செய்தியொன்று ஊடகத்திலே வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் தீவகப்பகுதியில் உள்ள பெண்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது விபச்சாரம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய வறுமை காரணமாக அவ்வாறு ஈடுபடுவதாகவும் அது அவருக்கு அவமானம் எனவும் சொல்லியுள்ளார்.

தீவகப்பெண்களை, தீவக மக்களை, தமிழ்பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் கூறிய கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்று தமிழ்பெண்கள் வறுமை நிலைமைக்குள் இருப்பதற்கு மிகப்பிரதான காரணங்களில் ஒன்று, கடந்த யுத்த காலப்பகுதியிலே பல ஆயிரக்கணக்கான குடும்பத்தலைவர்கள் இராணுவத்தினராலும் துணை இராணுவ குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த பெண்களுடைய நெருக்கடி நிலைக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கோருவதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், இந்த பெண்களுடைய நிலைமை என்னவென்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறு ஒரு கீழ்த்தரமான கருத்தினை தெரிவித்திருப்பது என்பது முழு தமிழர்களையும் அவமானப்படுத்தி அவர்களின் மனதை புண்படுத்தியிருக்கின்றது. இதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும்.

1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் மட்டும் டக்ளஸ் தேவானந்தா துணை இராணுவ குழு தலைவர் இருக்கத்தக்கதாக தீவகப்பகுதியில் இடம்பெற்ற ஒரு சுற்றிவளைப்பிலே 300 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கி;;ன்றார்கள், 69 பேர் காணாமல்போயிருக்கின்றார்கள்.
இது தொடர்பாக இன்றுவரை எந்த விசாரணையும் இல்லை அவர்கள் கௌரவமான பதவிகளில் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆளுநரின் இந்த செயற்பாட்டிற்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *