தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஜனாதிபதியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளிக்கவே தாம் வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பில் எவ்வித முன்னறிவிப்பும் விடுக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று (24) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் அவர்களால் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி இன்று முற்பகல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலைத்திட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், பிரதமரைச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அந்தக் கூட்டத்துக்குச் செல்லாமல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத போது வருகை தந்த நிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைத் தவறாகப் பிரதிபலிப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்பது தெளிவாகிறது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளதாகவும், முன் கூட்டியே சந்திக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகள் சுமார் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக த.தே.கூ. எம்.பி. ஆர். சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
