
நான்கு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் நாட்டை எவ்வாறு கொண்டு நடத்துவது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு இன்று என்ன செய்ய முடியும் என்பதை கூறமுடியுமா? செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்று இந்த அரசாங்கத்திடம் இல்லை.
நாட்டில் இன்று மின்சாரம் இல்லை. எரிபொருள் இல்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லை. சீமெந்து இல்லை. உண்மையில் நாட்டில் என்ன இருக்கின்றது. டொலருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கல்வி பொதுதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றி வருகின்றனர்.
இந்த நேரத்தில் குப்பிலாம்புகளை பற்ற வைக்கின்றனர். குப்பிலாம்புகளை பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணெய் இல்லாமல் போனால் என்ன நடக்கும்.
கொழும்பு நகரில் விறகுகளை பயன்படுத்த முடியுமா? நாட்டில் மெழுகுதிரிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உண்மையில் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். வியாபாரத்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும்போது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி, மீன்கள் உள்ளிட்ட பொருட்கள் பழுதாகும். அதுமட்டுமன்றி ஏனையப் பொருட்களும் பழுதடைகின்றன.
சவரக்கடைக்காரர்களால் தங்களது தொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்படும். அழகுகக்கலை நிலையங்களையும் நடத்தி செல்ல முடியாது.
தொழிற்சாலைகளை நடத்தி செல்பவர்களுக்கு அதனை நடத்தி செல்ல முடியாது. நான்கு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் நாட்டை எவ்வாறு கொண்டு நடத்துவது?
அரச, தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையை கூறினால் நாடு இன்று அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. நாடு முடங்கியுள்ளது. மக்கள் மிகுந்த மனவேதனையுடனேயே உள்ளனர்.
தற்போது மாணவர்களுக்கு நிகழ்தகையினூடாக வகுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின்வெட்டு காரணமாக நிகழ்தகை வகுப்புகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.