மின்வெட்டால் சுகாதார துறை முடங்கும் அபாயம்!

இன்று முதல் மின்வெட்டு ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாலும், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு இல்லாமையாலும் சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதிலளிப்பு பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை தற்போது வைத்தியசாலைகளில் இருக்கும் மின்பிறப்பாக்கிகள் மற்றும் பேக்கப் ஜெனரேட்டர்களையே பெரிதும் நம்பியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு இதற்கு தடையாக இருக்கும். வைத்தியசாலைகளுக்கான மின்பிறப்பாக்கிகளை இலங்கை மின்சார சபையே பராமரித்து வந்தது. தற்போது வரை அவற்றை இயக்குவதற்கு போதுமான அளவு டீசல் இருந்தது.

எனினும், வைத்தியசாலைகளில் உள்ள பேக்கப் ஜெனரேட்டர்களுக்கு, குறிப்பாக பெரிய வைத்தியசாலைகளுக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்கலாம் என்பது எங்களின் அச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய மின்வெட்டு காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனக் குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சார சபை, எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தின் தினசரி மதிப்பீட்டைப் பொறுத்தே இது தங்கியுள்ளது. எனினும் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இலங்கை மின்சார சபை தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *