
யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை நோர்தாம்ப்டன்ஷயாரில் உள்ள அவரின் வீட்டில் வைத்து சந்தேகநபரை கைது செய்தனர் என்று பெருநகர பொலிஸின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 வயதான சந்தேகநபர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் பிரிவு 51கீழ் குற்றங்கள் புரிந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் கைதான நபர் தொடர்புடையவர். இந்த நடவடிக்கை குறித்து நிமலராஜனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவும் அளித்து வருகின்றனர். விசாரணைகள் தொடர்கின்றன.