
கொழும்பு, பெப்.25
ரஷ்யா – உக்ரைன் மோதல் நிலைமையில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பொருளாதார, இராஜதந்திர பாதிப்புகளை தடுப்பதற்காக ஏதேனும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முன்னர் சமையல் எரிவாயுக்காக வரிசையில் நின்ற மக்கள் இப்போது எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தொழிற்சாலைகள் பலவற்றில் ஊழியர்களுக்கு பயணிக்க வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளையும் விநியோகிக்க முடியாத நிதி நெருக்கடிக்குள் நாடு உள்ளது. மின்சார தடையால் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. சரியான தீர்வு இன்றி ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்போது உக்ரேன் – ரஷ்யா மோதல் நிலைமையில் எமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய நிலைமையில், எமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய பொருளாதார, அரசியல், சமூக மற்றும் இராஜதந்திர பாதிப்புகளை தடுக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என்று அரசாங்கத்தை கேட்கின்றேன்.
தேயிலை ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு பெருமளவு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை பல்வேறு நாடுகள் விதிக்கும் நிலையில், இந்த நிலைமையில் எமது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உள்ளனவா என்று கேட்கின்றேன்’ என்றார்.