
கொழும்பு,பெப்.25
நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் டோர்ச் லைட்டுகளுடன் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சபையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் வியாக்கிழமை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில், சபாநாயகர் அறிவிப்பு, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ்வேளையில் சபைக்கு டோர்ச் லைட்டுகளை அவர்களை எடுத்து வந்திருந்த நிலையில், சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், டோச் லைட்டுகள் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருள் என்றும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
இதன்போது தினேஸ் குணவர்தன கூறுகையில்,
சிறப்புரிமை மற்றும் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலில் பொலிஸாரினால் எம்.பிக்கள் சிலரினால் கொண்டு வரப்பட்ட ஏதோவொரு பொருளை பரிசோதிக்க முயன்ற போது, வாக்குவாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளன. அது அனுமதிக்குள் உள்ளடங்காத உபகரணமாகும். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு பாரதூரமானது. அவ்வாறான உபகரணத்தின் உள்ளடக்கமானது இரசாயன மாற்றத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது தொடர்பான விசாரணை முறையாக நடைபெற்றதா? இந்த உபகரணங்களுக்கு அனுமதி உள்ளதா? அதனை ஏதேனும் இரசாயனமாக மாற்றுவதற்கு முடியுமா என்று ஆராயப்பட்டதா? இது முழு பாராளுமன்றத்திற்கும் பாதிப்பானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இவ்வேளையில் ஒழுங்குப் பிரச்சனையை முன்வைத்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில்,
எனது பையில் டோச் லைட் இருந்தது. தற்போது மின்வெட்டு இடம்பெறுவதால் அதனை கொண்டு வருவது தவறு அல்ல. மலசலக் கூடத்திற்கு செல்லும் போது மின்சாரம் தடைப்பட்டால் இது தேவைப்படும். அதனால்தான் டொச் லைட்டை கொண்டு வந்துள்ளேன் என்றார்.
இவ்வேளையில் எழுந்த சபை முதல் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் முழுமையாக இருள் நிலைமை ஏற்படாது. அவ்வாறு நடக்கும் என்று நினைத்து வந்திருந்தால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் மின்தடைப்பட்டால் அது சட்டவிரோத செயற்பாடாகவே அமையும். இதனை உடனடியாக தடை செய்யுமாறு கேட்கின்றேன். இதனை தடை செய்யாவிட்டால் எங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கைகளில் டோச் லைட்டுகளை ஒளிரச் செய்து ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் தமது சட்டைப் பைகளில் மின்வெட்டுக்கு எதிரான ஸ்ரிக்கர் ஒன்றையும் ஒட்டியிருந்தனர். அத்துடன் மின்வெட்டுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.