
கொழும்பு, பெப் 25: மின் வெட்டால் நாட்டில் நெருக்கடி நிலை நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில் ” ஒரு வருடத்திற்கும் மேலாக அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து அரசாங்கமே எச்சரித்து வந்தது. அதை யாரும் செவி மடுக்கவில்லை. தற்போது அது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அரசாங்கம் தவறு செய்தால், அதைத் திருத்தி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். எங்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றைத் திருத்த முயற்சிப்போம், அதனால் பாதிக்கப்படுவது அரசாங்கம் மட்டுமல்ல, முழு நாடுமே பாதிக்கப்படுகிறது.
இலங்கையில் 10 நாட்களுக்கு தேவையான ஒக்டேன் 92 பெற்றோல், 40 நாட்களுக்கு தேவையான ஒக்டேன் 95 மற்றும் 8 நாட்களுக்கு தேவையான சுப்பர் டீசல் கையிருப்பு உள்ளது. இலங்கைக்கு கிடைத்துள்ள எரிபொருள் கையிருப்பில் 6,000 மெட்ரிக் தொன் இலங்கை மின்சார சபைக்கும், 4,200 மெட்ரிக் தொன் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
உலை எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 30,000 மெற்றிக் தொன் உலை எண்ணெய் கிடைக்கும். சரியான திகதியில் கடனுதவி கிடைத்தால், அரசாங்கத்தினால் இதை உறுதிப்படுத்த முடியும். இந்திய கடன் வரித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
மின் வெட்டால் நாட்டில் நெருக்கடி நிலை நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். இது விரைவில் தீர்க்கப்படும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 900 மெற்றிக் தொன் உலை எண்ணெயை உற்பத்தி செய்கிறது, எனினும் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டிற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருளை இறக்குமதி செய்யத் தேவைப்படும், இது ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அவர்.