
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யாவின் பல நகரங்களில் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,600 இற்கு மேற்பட்டவர்கள் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் மொஸ்கோ மற்றும் சென்.பீட்டர்ஸ்பர்க், யெகாடெரின்பர்க் உள்ளிட்ட 53 நகரங்களில் நடந்த பேரணிகளில் பல நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் திரண்டு போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழன் அதிகாலை உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்ய பொப் நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்கள், ஒரு தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் உள்ளிட்டவர்கள் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டனர்.
இந்நிலையில் 53 நகரங்களில் நடந்த பேரணிகளில் ஈடுபட்ட 1,667 பேரை கைது செய்து பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக ரஷ்யாவில் உள்ள தகவல் உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய அரசின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்களின் போராட்டங்களை ஒடுக்கிய பின்னர், மிகப் பெருமளவில் ரஷ்யாவில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டமாக இது அமைந்திருந்தது.
மொஸ்கோ, சென். பீட்டர்ஸ்பர்க் மற்றும் யெகாடெரின்பர்க் உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ‘போர் வேண்டாம்!’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
மொஸ்கோவில் மட்டும் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொவிட் தொற்றுநோயைக் காரணம் காட்டி தலைநகரில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் பாரிய இராணுவ நடவடிக்கையைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று வியாழக்கிழமை ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
ரஷ்ய அரச தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம்நாட்ஸோர் நேற்று விடுத்த ஒரு அறிக்கையில், ரஷ்ய அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்கள் மட்டுமே நம்பகமானவை. தவறான தகவல்களை பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.