கொழும்பு, பெப் 25: தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், “தேசிய” மற்றும் “இணைப்பு” மொழிகளை தனது “அடையாள குறியீட்டில்” இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது கண்டிக்கதக்கது என்று கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “”தேசிய” ரூபவாஹினி தனது அடையாள குறியீட்டிலிருந்து, தமிழ், ஆங்கிலம் ஆகிய “தேசிய”, “இணைப்பு” மொழிகளை அகற்றியுள்ளது. சற்று முன், ஊடகதுறை அமைச்சர் டல்லஸ் அளகபெரும வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை ஆழமாக சுட்டிக்காட்டினேன்.
இது பற்றி இன்றுகாலை எனது அதிகாரபூர்வ டுவீடர் தளத்திலும் இதுபற்றிய எனது முறைப்பாட்டை தெரிவித்து, அதை அமைச்சருக்கும் பகிர்ந்துள்ளேன்.
“தேசிய” ரூபவாஹினி கூட்டுத்தாபணம், “தேசிய” மற்றும் “இணைப்பு” மொழிகளை தனது “அடையாள குறியீட்டில்” இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்க தக்கது என கூறினேன்.
தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது என கூறி உள்ளேன்.
இதை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் தன்னிச்சையாக மேற்கொண்டார் அல்லது அரசாங்கத்தின் கொள்கையாக என அமைச்சரிடம் வினவினேன்.
மும்மொழிகளும் ஒன்றாக பல்லாண்டுகளாக இருந்ததை, இன்று பிரிப்பது என்பதுதான் பிரிவினைவாதம் எனவும் கூறினேன்.
எனது கருத்துகளுக்கு அமைதியாக செவிமடுத்த அமைச்சரும், எனது நண்பருமான டலஸ் அளகபெரும, இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றார் அவர்.