வடமேல் மாகாண சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிப்பு – ஆளுநர் உத்தரவு!

வடமேல் மாகாண சபையின் மனித வள அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு  உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் , தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைக் கவனமாகக் கேட்டறிந்த ஆளுநர் நஸீர் அஹமட்,  தங்கள் வாழ்க்கைச்செலவுக்கான வருமானத்தை தேடிக் கொள்வதற்காகவே அனைவரும் தொழில்களில் ஈடுபடும் நிலையில், குறைந்த சம்பளத்தில்  நீண்ட காலமாக மாகாண சபையின் கீழ் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஏனைய சகல பிரச்சினைகள் குறித்தும் தான் தீவிர கரிசனை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஊழியர்களின் பிரச்சினைகளை  ஒவ்வொன்றாக ஆராய்ந்து தீர்த்துவைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

வடமேல் மாகாண சபை பாதுகாப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் பதினேழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் , வருடாந்த மற்றும் வரவுசெலவுத்திட்டங்கள் ஊடான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக இவ்வாறான சம்பள அதிகரிப்பொன்று வழங்கப்படுவது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *