மறப்பதா? மன்னிப்பதா? கிடைக்கும் நீதியைப்பொறுத்தே இருக்கின்றது! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு

 மறப்பதும் மன்னிப்பதும் எங்களுக்கு கிடைக்கும் நீதியைப்பொறுத்தே இருக்கின்றது. மறப்பதா மன்னிப்பதா என்பதை நாங்களே தீர்மானிப்போம். பார்வையாளர்களாக இருப்பவர்கள் தீர்மானிக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

சர்வதேசத்திலிருந்து இங்கு ஊடுறுவி வரும் சில அமைப்புகள் உள்ளக பொறிமுறைக்குள் செல்லுமாறு கூறுவதாகவும் தங்களது நிதி ஈட்டலுக்காக தங்களை பயன்படுத்தமுனைவாதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரிய போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது  பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்துகொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது மரண சான்றிதலோ, இழப்பீடோ அல்ல முறையான நீதி விசாரணையையே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு இறப்புச்சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

சர்வதேச நீதிப்பொறிமுறையே வேண்டும், உள்ள பொறிமுறை வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும், கொலையாளிகளை கைதுசெய், மரணச்சான்றிதழை ஏற்றுக்கொள்ளமாட்டோம் போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

தமக்கான நீதிகள் கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கையெடுக்கவேண்டும். சில அமைப்புகள் தமக்கு நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக தமது போராட்டத்தினை காட்டிக்கொடுக்க முனைவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *