
எங்களின் உறவுகள் எதற்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் , என்பதில் உள்ள உண்மையான விடயங்களை ஊடகங்கள் கூறவேண்டும், இல்லையென்றால் எமது உறவுகள் எம்மிடம் திரும்ப வர மாட்டார்கள் என கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் ஊடக மையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் சிறைச் சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கரும்புலி தினத்தை நினனவு கூர முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக யாழிலிருந்து வரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது தவறு, பளை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேக நபரின் தொலைபேசியில் ,எனது கணவரின் தொலைபேசி இலக்கம் காணப்பட்டதால் கைது செய்யப்பட்டதாகவே எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றைய நபர் திருமண பத்திரிகை அழைப்பிதழ் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே அவர்கள் குற்றம் புரியவில்லை.18 மாதங்களாக வழக்கு இன்றி சிறையில் உள்ளனர்.
இதனை அரசியல் பிரமுகர்கள் கண்டு கொள்ளவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் இப்போது தான் அறிகின்றோம்.
எமது உறவுகள் எமக்கு வேண்டும். ஆகவே ஊடகங்கள் உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு உதவ வேண்டும் என்றனர்.