பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா? நடக்காது என்கிறார் ஜனாதிபதி – குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.

அமைச்சர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி ரணில், 

பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லையென்றும் அப்படி ஜனாதிபதித் தேர்தல் இதற்கு முன்னர் நடந்ததில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தலைக் கூட அறிவிக்க முடியாது. தேர்தலுக்கு தேவையான சிவில் பாதுகாப்பு பொலிஸாரிடம் உள்ளது. 

எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து இந்த விடயங்களை ஆராய வேண்டும். அந்த தெரிவுக்குழு ஆராய்ந்து முடிக்கும்வரை ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது. அப்படியே அறிவித்தாலும் நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இந்தப் பின்ணணியில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படவிருந்தபோதும் அது திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர்,

தனது ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொள்ளவேண்டிய தேவைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் பதவியில் அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் ஒருவர் காணப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் யாரை தொடர்புகொள்வது என்ற குழப்பநிலைக்குள் நாங்கள் தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *