
யாழ்ப்பாணம், பெப்.25
தீவக பெண்கள் தொடர்பில் எந்தவொரு அடிப்படையும் இல்லாது வடக்கு மாகாண ஆளுநர் கருத்துகூறி அந்த மக்களை மன உளைச்சலிற்கு ஆளாக்கியமையைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபை அமர்வு விழாயக்கிழமை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது சமூகத்தின் ஒரு மூலையில் இடம்பெறும் ஒரு தவறை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைகூறும் முடிவு கண்டிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக ஒரு பொறுப்பான பதவியில் அல்லது மேல் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு எழுந்தமான முடிவை பகிரங்க வெளியில் பதிவிட முடியாது.
இலங்கையின் எந்தப் பகுதியிலும் ஏதோ ஒரு குற்றச் செயல் இடம்பெறக்கூடும். அதற்காக ஏதாவது ஒரு பிரதேசத்தை குற்றப் பிரதேசம் எனக்கூறமுடியுமா?
அதாவது “சமூகத்திற்கு விரோதமான செயல்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை தெற்கின் ஏதாவது ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டு எமது ஆளுநரால் கூற முடியுமா அவ்வாறு கூறிய பின்பும் அவரால் செயல்பட முடியுமா? இவற்றினை அறிந்துகொள்ள முடியாமல் இருக்கும் எமது ஆளுநரை எண்ணி மன வேதனையடைவதனைத் தவிர வேறு வழியும் எனவே இதனை இதற்கு எதிராக எமது கண்டனத்தீர்மானத்தை முன்மொழிகின்றேன் என த.தே.ம.முன்னணி உறுப்பினர் கணேசராஜாமுன்மொழிய கூட்டமைப்பு உறுப்பினர் வழிமொழிந்தார்.