
14 நாட்கள் உயிரிழந்த தாயாரின் சடலத்துடன், வீட்டில் தங்கியிருந்த மகள் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் மகள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் தெரியவருகையில்,
நுகேகொடை – தெல்கந்த பெங்கிரிவத்தவிலுள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (23) அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொலிஸார் அந்த வீட்டுக்குச் சென்ற சமயம் பெண்ணொருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் அதற்கு அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரும் காணப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்த பெண்ணின் மகள் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அங்கிருந்த பெண்ணின் சடலம் அதிக துர்நாற்றம் வீசியதையடுத்து அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
அந்தப் பெண்ணின் கணவர் பலநாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் தாயும் மகளும் மாத்திரமே வீட்டில் வசித்துவந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 14 நாட்கள் தாயாரின் சடலத்துடன் அந்த வீட்டில் மகள் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
மகளுக்கு உளநல பாதிப்பு காரணமாக அயலவர்களுக்கு அவர் அறிவிக்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது, அவரின் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணம் எய்தினாரா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.