ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு 50,000 மெற்றிக் தொன் கோதுமையை மனிதாபிமான உதவியின் கீழ் வழங்கியமைக்காக இந்தியாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

நாடு ஒரு பெரிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 50000 மெற்றிக்தொன் கோதுமையை சரியான நேரத்தில் இந்தியா வழங்கி உள்ளது.

இதற்காக இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டு புதுடில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

அமிர்தசரஸில் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா, ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் மற்றும் உலக உணவுத் திட்ட இயக்குநர் பிஷாவ் பராஜூலி ஆகியோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 2500 மெற்றிக் தொன் கோதுமை ஏற்றிச் செல்லும் 50 பாரவூர்திகளின் முதல் தொடரணியை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில், மீதமுள்ள கோதுமைத் தொகையை ஒரு மாத காலத்திற்குள் அனுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு,  இந்திய அரசாங்கத்திற்கும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, கோதுமை ஆப்கானிஸ்தானுக்குள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆப்கானிய தூதுவர், ‘நான் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆப்கானிஸ்தானும் இந்தியாவுக்குத் தேவைப்படும் போதெல்லாம் துணை நிற்கிறது,’ என்று கூறினார்.

உலக உணவுத்திட்டத்தின் தகவல்களின்படி ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது. இந்தியா பெரிய சகோதரனாக இருப்பதால் உணவு உதவிகள் மூலம் எங்களுக்கு உதவுகின்றது. அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,’ என்று அவர் மேலும் கூறினார்.

நவம்பர் மற்றும் டிசம்பரில் எங்களுக்கு (ஆப்கானிஸ்தானுக்கு) உணவு தானியங்கள் தேவைப்பட்டன, ஆனால் பாகிஸ்தான் அதன் சாலைகளைப் பயன்படுத்த அனுமதிகளை வழங்குவதற்கு நீண்ட காலம் எடுத்தது, இதனால் தான் இந்தியாவின் உதவிகளை எடுத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மருந்துகளையும், கொரோனா தடுப்பூசிகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *