
கொழும்பு, பெப்.25
எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பஸ் போக்குவரத்துக்கு கடும் சிக்கல் நிலை ஏற்பட்டதாக பஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தனியார் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான 400 இற்கும் அதிகமான தனியார் பஸ்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை நேற்று இடைநிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்து மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார தெரிவித்தார்.
நாளுக்கு நாள் இந்நிலைமை தீவிரமடைந்து வருவதாகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் இதவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பஸ்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் கடும் அசௌகரிய நிலைமை உருவாகியுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டனா்.
எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக கொழும்பு உள்ளிட்ட வெளி மாகாணங்களுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கு நேற்று கடும் தாக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் கிடைக்கும் அளவுக்கமைய பஸ்களை போக்கவரத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டோ டீசல் இல்லாமையின் காரணமாக ஒரு சில பஸ்களுக்காக சுப்பர் டீசலை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.