உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை: மஹிந்தனந்த அளுத்கமகே

கொழும்பு, பெப்.26

அடுத்த போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்குத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்குத் தேவையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் முதலாவது கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலக சந்தையில் உரத்தின் விலை பாரிய அளவில் உயர்வடைந்திருப்பதாலும், இந்நாட்டில் இரசாயன உரத்துக்கான தடையுடன் இணைந்ததாக சந்தையில் காணப்படும் உரத் தொகையை அதிக விலையில் விற்பனை செய்ய வியாபாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் காலத்தில் இவ்வாறு உயர்ந்த விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தப் போகத்திலிருந்து இவற்றை அரசாங்கம் உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குழுவில் தெரிவித்தார்.

உலக சந்தையில் அதிகரித்துள்ள விலைகளைக் கவனத்தில் கொண்டு விலைகளை ஒழுங்குபடுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் இக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

அத்துடன், சேதன உரத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் பசுமை விவசாயத்தை மேலும் தரம்மிக்கதாகப் பேணுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், இதற்காக எப்பொழுதும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் நிலம் மற்றும் சூழல் நிலைமைகளுக்கு அமைய வழங்கப்பட வேண்டிய உரத்தின் அளவு மற்றும் உர வகை வேறுபடுவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்தின் தேவையைக் கண்டறிவதற்கு மாவட்ட செயலாளர், கமநல உதவி ஆணையாளர், கமநல உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட உற்பத்திக் குழு அமைக்கப்பட்டு அதன் ஊடாக உரத்தை வழங்குவதற்கான முறைமையொன்று ஒழுங்குபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2019/20 வருடத்துக்கான லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை, 2018/2019 வருடத்துக்கான கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை, 2019 வருடத்துக்கான ஹெக்டர் கொப்கேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் குழுவில் ஆராயப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *