இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பும் விடுத்தது. எனவே, இந்தக் கட்சியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது.
வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அந்தப் பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்குச் சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.