சிங்கள கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது மூன்று பெரிய பாதிப்புகள் ஏற்படும். ஒன்று சிங்களக் கட்சிகள் தாயகத்தில் ஊடுருவும்.
இது காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும். சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். விகாரைகள் நல்லூரிலும் வரலாம். செல்வச் சந்நிதியிலும் வரலாம். வல்லிபுர கோவிலிலும் வரலாம். இரண்டாவது ஆக்கிரமிப்புகள் என்பது சிங்கள அரசாங்கங்களில் தீர்மானங்களல்ல. அது சிங்கள பௌத்த அரசின் தீர்மானம்.
எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கிரமிப்புகள் தொடரும். இதற்கு ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ, அனுர குமார திசநாயக்காவோ விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. மூன்றாவது பொருளாதாரப் பிரச்சினையை காட்டி இனப் பிரச்சினையை நிலவிரிப்புக்குள் தள்ளும் முயற்சிக்கு நாமும் துணை நின்றவர்களாவோம் .
முன்னிலையில் உள்ள சிங்கள வேட்பாளர்கள் நால்வரும் தமிழ் மக்களின் நண்பர்களல்லர். நால்வருமே பெருந்தேசிய வாதத்தின் கூலிகள். ரணில் விக்கிரமசிங்க காலத்தில் தான் வெடுக்கு நாறிமலை, குருந்தூர் மலை, முல்லைதீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில், மயிலத்தமடு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டன.
அவற்றைத் தடுத்து என நிறுத்த அவர் முன்வரவில்லை. 13வது திருத்தத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் நடைமுறைப்படுத்தக்கூட தயங்குகின்றார் சஜித் பிறேமதாசா வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவேன் சூளுரைத்தவர் இனப்படுகொலை செய்த படைத்தளபதிகளை தனது கூடாரத்தில் வைத்திருப்பவர், 13-வது திருத்தத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல பின்னடிப்பவர். அனுர குமாரதிசநாயக்கா வடக்கு கிழக்கைப் பிரித்தவர். சுனாமி பொதுக் கட்டமைப்பை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் வயிற்றில் அடித்தவர். 25000க்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை இன அழிப்பிற்கு திரட்டிக் கொடுத்தவர். நாமல் ராஜபக்சவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இன அழிப்பின் நேரடிக் குற்றவாளி. இவர்களுக்கு எப்படித்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும்.
இவற்றிற்கு அப்பால் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை தொடர்ச்சியாக சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்களை தேசமாகத் திரட்ட வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் தேசமாக திரளாமல் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளை கையாள முடியாது. சர்வதேச அரசியலையும் கையாள முடியாது.
தவிர ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை அம்பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை நிறுத்துவதற்கு சர்வதேசப் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இவையெல்லாவற்றையும் சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் இத்தேர்தலைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டும். உலகத்தமிழர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒன்று திரண்டு ஆதரவை பெற வேண்டும்.
இதற்கெல்லாம் முக்கிய நிபந்தனை தமிழ் மக்கள் தேசமாகத் திரள்வது தான.; இதற்கான ஆரம்பப்புள்ளி தான் தமிழ் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தமிழ் மக்களின் தேசிய கடமை என குறிப்பிடப்பட்டுள்ளது.