தாம் அதிகாரத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 68 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி மொனராகலையில் இன்று(18) சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அனைவரும் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம்.
புலனாய்வுத்துறை அறிக்கையின் பிரகாரம், 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் – அநுர ஜோடி கீழ் மட்டத்தில் இருக்கிறது.
புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன்முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம்.
தான் மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாப்பதோடு, மத சார்பற்ற நாட்டை உருவாக்குவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.