வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்..!

ஜனாதிபதி தேர்தல் நாளையதினம்(21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் என மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இன்றையதினம் காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு நிலையங்களுக்கு   அனுப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, யாழ் மாவட்டத்தில் வாக்கெண்ணும் மையமாக செயற்படவுள்ள யாழ் மத்திய கல்லூரியை சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தவரையில்  86,889 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று காலை 7 மணி முதல்  வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(20) காலை 7 மணியளவில்  திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *