தமிழரசுக்கட்சியின் நேற்றய அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக்கட்சியினுடையதே வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போகமுடியாது.என யாழ்மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
இன்றையதினம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்ப்படவேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்ற விடயம். ஒரு கட்சி மற்றகட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து உன்மையான கூட்டாக செயற்படவேண்டும்.
அன்று தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் நாங்கள் கூட்டமைப்பாக செயற்ப்பட்ட போது பலபிரச்னைகள் உருவாகியிருந்தது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தாங்கள் தனியாக போட்டியிடப்போவதாக தமிழரசுக்கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பின்னர் சம்பந்தருடன் நாங்கள் கலந்துரையாட சென்றபோதும் அவர் மிகத்தெளிவாக அதேகருத்தை சொல்லியிருந்தார். நீங்கள் தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்ய பாக்கிறீர்களாஎன்றும் அவர் சொன்னார்.
இருப்பினும் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக்கட்சி சென்றாலும் நாங்கள் இயங்காமல் இருக்கமாட்டோம் தானே. அப்படி இருக்கவும் கூடாது. எனவே நாங்கள் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினூடாக உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுவை தாக்கல்செய்தோம். இப்போது பல கட்சிகள் இணைந்திருக்கின்றது.
அவர்கள் தான் விட்டுச்சென்றவர்கள் எனவே அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும்,சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடியபின்னரே முடிவினை எடுக்கலாம். தனிப்பட்ட முறையில் சொன்னால் அவர்களது வரவு இந்த கட்டமைப்பை பெரிதாக்கும். அது எனக்கும் விருப்பம்.
அனைவரும் இணைவது தமிழ்மக்களுக்கு பலமாகவும் இருக்கும்.
ஆனால் அவர்கள் சொல்லியிருப்பது தமிழரசுக்கட்சி சின்னத்தில் என்று. இது பழையபடி தமிழரசுக்கட்சிதான் முடிவெடுக்கப்போகின்றது என்ற அடிப்படையிலும், ஆதிக்கம் தமிழரசுக்கட்சியினுடையதே நீங்கள் சேருங்கள் உங்களுக்கு நாங்கள் பார்த்து தருவோம் என்றவாறான ஒரு நிலைப்பாட்டையே கூறியிருக்கிறார்கள். அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போகமுடியாது.
அனைவரும் சமபங்காளிகளாக ஒரு கூட்டமைப்பாக இணைந்தால் அதில் சேரமுடியும். அதற்கான நேரகாலம் இருக்கிறதோ தெரியாது. அவர்கள் மூன்றுநாட்களையே அவகாசமாக கொடுத்துள்ளனர்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சங்கு சின்னத்தை எடுப்பதற்கான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதற்கான முயற்சியினை செய்வதாக தீர்மானித்திருக்கின்றோம் செய்வோம்.
அத்துடன் இளைஞர்களையும் நிச்சயமாக உள்ளே கொண்டுவரவேண்டும். அதேபோல அனுபவம் உள்ளவர்களும் இருக்கவேண்டும்.இருந்தாலும் அப்படி ஒரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் இல்லை. தேர்தலில் தாங்கள்போட்டியிடுவதற்காக சிலர் உருவாக்கும் ஒரு கருத்தே இது.
இது கட்சிகளை பலவீனப்படுத்துகின்ற ஒரு விடயம். நாங்கள் கடந்தமுறையும் இளைஞர்களை நிறுத்தியிருந்தோம். இப்போதும் நிச்சயமாக இளைஞர்கள் கேட்பார்கள்.
தமிழ்கட்சிகள் பிரிந்து நிற்பது பிரதிநித்துவத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்ப்படுத்தும். அதற்காகவே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்று பார்க்கின்றோம். சிலர் சேரமுடியாத நிலை இருக்கிறது, குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவும் நாங்களும் சேருவது கஸ்ரமான விடயம்.
அரசுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தால் அரசாங்கம் சொல்வதையே சொல்லவேண்டிய சங்கடம் இருக்கிறது. எமது சார்பாக கதைக்க முடியாது. மௌனியாகவே இருக்கவேண்டும். அபிவிருத்திப்பணிகள் செய்யலாம். ஆனால் 1956 இற்குப்பின்னர் நியாயமான ஒரு தீர்வினை நோக்கியே தமிழ்மக்கள் வாக்களித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.