தமிழரசு கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் விருப்பம்- சாணக்கியன் சுட்டிக்காட்டு..!

அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்றையதினம்(30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பத்தாவது பாராளுமன்றம் கூடுவதற்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஆரம்ப வேலைகளை தற்போது அனைத்து கட்சியினரும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு வவுனியாவிலே ஒன்றுகூடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அந்தத் தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலே போட்டியிடுவதென்பது ஒரு தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பிலே போட்டியிடுவது பற்றிய தகவலை வெளியிட்ட பின்னர் பல துறைகளைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள், சுகாதாரம்,கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள் எனப் பலர் எங்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை தந்திருக்கின்றார்கள்.

இன்னும் பல விண்ணப்பங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலே இம்முறை இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வீட்டுச் சின்னத்திலே சிறந்த வேட்பாளர் பட்டியலொன்றை முன்னிறுத்த வேண்டுமென்பதை மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் பெருஞ் செய்தியொன்றை சொல்லியிருக்கின்றார்கள். அந்த செய்தி என்னவென்றால் ஊழலற்ற, மோசடியில்லாத, நேர்மையானதொரு எதிர்காலத்தை நோக்கி செல்லக்கூடிய அரசியல்வாதிகள் தான் தேவை என்பதாகும்.

மக்களுடைய மனநிலை அவ்வாறிருக்கும்பொழுது நாங்கள் அதனை புரிந்துகொண்டு எங்களுடைய வேட்பாளர் பட்டியலும் பொதுவான இலங்கையில் இருக்கின்ற அந்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பட்டியலாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒரு பிரதிநிதித்துவத்தினை இழந்திருந்தார்கள்.கடந்த காலத்தில் மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களே இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழப்பதற்கு காரணமாக அமைந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *