வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும் பிறிதொரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக காட்சியளித்தது.
வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினமும் குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.
இதனையடுத்து, அந்தப்பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தனது சகாக்களுடன் சென்றிருந்தார்.
இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் பாராளுமன்ற உறுப்பினருடன் வருகைதந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திரும்பித்தாக்கினர்.
இதனால் இருதப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்பட்டனர். குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சற்றுநேரம் பதட்டநிலை ஏற்பட்டது.
சம்பவம் இடம்பெற்று கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார். எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், திலீபன் எம்.பியின் மகனுக்கும் வேறு ஒரு இளைஞருக்குமிடையே மோட்டார் சைக்கிள் ஓட்டுவது தொடர்பாக தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவ்விடத்திற்கு வந்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த இளைஞர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
மக்கள் பிரதிநிதிகளாக இருந்து மக்களை வழிநடத்த வேண்டியவர்களே இவ்வாறு சண்டித்தனத்தில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.



