இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கோணஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நடத்திய தேடுதலில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, 106 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 78 லட்சம் ரூபாய் பணம் என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சந்தேக நபர் ஒருவர், இந்த போதைப் பொருள் வியாபாரத்தை வழிநடத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கண்டறிவதற்காக சந்தேக நபர்கள், நிதி மற்றும் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர் எனவும் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.