குருநாகலிலிருந்து மாவத்தகம மெட்டிபொக்க நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பேருந்தின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு இருந்துள்ளது..
குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளனர்.
இதில், இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை அவதானித்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தமாக கத்தியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பாம்பு, பேருந்தின் பயணிகளுக்கு நடுவில் முன்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
இதன் போது பயணிகள் இருக்கைகளில் ஏறியதுடன் மேலும் சிலர் பேருந்தின் கூரையில் ஏற முயன்றமையால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
பாம்பு தம்மை நோக்கி வருவதை கண்ட சாரதி, குருநாகல் விகாரைக்கு அருகில் பேருந்தை நிறுத்தியதையடுத்து, பயந்துபோன பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கினர்.
அதன் பின்னர் பேருந்தில் இருந்த பாம்பும் காணாமல் போயுள்ளது.
எனினும் பேருந்தில் பயணிக்க அச்சமடைந்த சிலர் வேறு பேருந்தில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.