பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும்- சித்தார்த்தன் நம்பிக்கை..!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என அந்தக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம்(07)  ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவதாகத்தான் தீர்மானித்து இருக்கின்றோம். 

ஆனால், கிழக்கிலே திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ்ச் சமூகம் பலவீனமான நிலையில் இருக்கின்றது.

அதனால் அங்கு தமிழர் தரப்பில் ஆகக் குறைந்த்து ஓர் ஆசனம் எடுப்பதென்றால் கூட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கேட்டால்தான் சாத்தியமாகும் என்ற நிலைமை உள்ளது.

ஆகையினால், இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள  நிலைமைகளுக்கு ஏற்ற வகையில்தான் நாங்கள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிள்ளது. 

இதன் காரணமாகத்தான் தமிழரசுக் கட்சியுடன் நாங்கள் தொடர்ந்தும் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கமைய அவர்களுக்கும் எங்களுக்கும் நடைபெறும் பேச்சுக்களின் நிமித்தம் திருகோணமலையில் தமிழரசுக் கட்சி சின்னத்திலும், அம்பாறையில் சங்கு சின்னத்திலும் போட்டியிடுவது தொடர்பில் கருத்தளவில் ஒத்துக்கொண்டு இருக்கின்றோம்.

ஏனெனில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் எங்கள் பிரதிநிதித்துவம் இழக்கின்ற நிலைமை உள்ளது. 

ஆகவே, தமிழரசுக் கட்சியும் இதை உணர்ந்து கொண்டு திருகோணமலையில் வீட்டிலும், அம்பாறையில் சங்கிலும் போட்டியிடுவதன் மூலம் ஆகக் குறைந்தது நாங்கள் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தையாவது உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். 

அதைஉணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். அந்தவகையில் தொடர்ந்தும் நாங்கள் முயற்சிப்போம்.இதேவேளை, கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகும் பட்சத்தில் நிச்சயமாக நாம் அங்கும் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *