மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை; சசிகலாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! சத்தியலிங்கம் தெரிவிப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தலைவர் பதவி உள்ளிட்ட கட்சியில் அவர் வகித்த பொறுப்புக்களிலிருந்து விலகும் கடிதம் எதுவும் இதுவரை எனக்குக்  கிடைக்கவில்லை.” – என்று கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் விடயங்களைக் கையாள்வதற்கான நியமனக் குழு வவுனியாவில் இன்று புதன்கிழமை கூடியது. இதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இராஜிநாமாக் கடிதம் எதுவும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. 

அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினார்கள் என்று ஊடகங்களின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. 

எனவே, இது தொடர்பாக நான் கருத்துக் கூற முடியாது. அவ்வாறான நிலைமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. 

கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக் குழுவை நியமித்தது. அந்தக் குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிய வேண்டும் என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கின்றது.

இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டங்களிலும்  உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது.

அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பாகவும் மத்திய குழுவில் கதைக்கப்பட்டது. 

தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக் கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேறு ஒரு கட்சியூடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக் கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்புக்கமைய அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *