
உக்ரைன், பெப்.27
தலைநகர் கீவ்வை கைப்பற்றும், ரஷ்ய படைகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளில் ஒன்றில்,
“கீவ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
நகரை பாதுகாக்க முன்வருபவர்களுக்கு ஆயுதங்களை தர தயாராக உள்ளோம்.
இந்த போரை நிறுத்த விரும்புகிறோம். அப்போது தான் அமைதியாக வாழ முடியும்.
தலைநகரைக் கைப்பற்றுவதற்கு நேற்றிரவு ரஷ்ய சிறப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் திட்டத்தை முறியடித்துள்ளோம். போரை எதிர்த்த ரஷ்யர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
உங்களிடம், எங்களிடமும், உலகத்திடம் பொய் சொல்பவர்கள் அதனை நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க அரசின் பாதுகாப்புடன் தலைநகர் கீவை விட்டு வெளியேற உதவி செய்ய தயாராக உள்ளதாக செலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க மறுத்த செலன்ஸ்கி, தனக்கு பயணம் தேவையில்லை. ஆயுதங்கள் தான் தேவை எனக் கூறியதாகவும் அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேற்கு நாடுகளுடனான இராஜதந்திர உறவு ரஷ்யாவுக்கு தேவையில்லை என, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் (dmitry medvedev) தெரிவித்துள்ளார்.
“ மேற்கு நாடுகளின் தூதரகங்களையும், மேற்கு நாடுகளில் உள்ள தூதரகங்களையும் மூட வேண்டும்.
புடினால் வரையறுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வரை, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடரும். என்றும் அவர் தெரிவித்தார்.