
எம்பிலிபிட்டிய, பெப்.27
நாட்டை ஆட்சி செய்யும் போது, பொது மக்களின் சுதந்திரம், எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை, எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ரண்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால், 30 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- அந்நியச் செலாவணி பற்றாக்குறையானது, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும். கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் கிடைக்கப்பெறும் செலாவணி இழப்பு, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொது மக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை என்றார்.