போரை நிறுத்தும் பிரேரணை: வீற்றோவால் தடுத்தது ரஷ்யா

நியூயோர்க், பெப். 27

உக்ரைனில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவந்து தனது படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றுகோரும் பிரேரணையை ஐ. நா. பாதுகாப்புச்சபையில் தனது வீற்றோ அதிகாரத்தினால் தடுத்துவிட்டது ரஷ்யா.

ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று எதிர்த்து வாக்களித்தால் கூட பிரேரணையை முன்நகர்த்த முடியாது என்பது சபையின் சாசன விதி ஆகும். சீனா, பிரான்ஸ் அமெரிக்கா, ரஷ்யா (சோவியத்), இங்கிலாந்து ஆகியனவே அந்த ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆகும். பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற அங்கத்துவத்தைக் கொண்டுள்ள 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆனால் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும், அங்கத்துவ நாடான இந்தியாவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் யுத்தத்தில் மேற்குலகின் வெற்றிக்கு சீனா, இந்தியாவின் பிரதிபலிப்புகள் மிக அவசியமானவையாகும். பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப் பட்ட இந்தப்பிரேரணையை அடுத்த கட்டமாக பொதுச் சபை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

பிரேரணையை ரஷ்யா தடுத்துவிட்டதை அடுத்து ரஷ்யாவைப் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஐ. நாவுக்கான உக்ரைன் நாட்டின் தூதர் முன்வைத்திருக்கிறார். அது சாத்தியமா? 1945 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐ. நா. சாசனத்தின்படி ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் என்பதில் உள்ள ‘நிரந்தரம்’ என்பதை அகற்றுகின்ற – மாற்றுகின்ற எந்த வழிமுறைகளும் விதிகளில் கிடையாது. ‘நிரந்தரம்’ என்பது நிரந்தரமானது. ஆகவே ரஷ்யாவை நீக்குகின்ற கோரிக் கையானது ஐ. நாவைக் கலைக்கின்ற யோசனையாகவே கருதப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *