அரசிடமிருந்து புதிதாக மதுபானசாலை அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை – அங்கஜன்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய மதுபான சாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தாவது, தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்த படியாக பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது.

இந்நிலையில் என் மீதும் எனது தந்தையார் மீதும் பழி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரமும் அற்ற வீண் குற்றச்சாட்டுகளை தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக முன் வைத்து வருகின்றனர்.

இந்த ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது யார் என பார்த்தால் கடந்த காலத்தில் எம்மோடு நேரடியாக போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளும், எமது சமூக சேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுமே இவ்வாறு பொய்யாக வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

இவ்வாறானவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனாலும் நம் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை நமக்கு உண்டு. அதனால்தான் சத்திய கடதாசி ஊடாக நாம் எமது ஆதாரங்களை முன்வைத்து, புதிதாக எந்த ஒரு மதுபான சாலை அனுமதியையும் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளோம்.

எனது தந்தையார் ஒரு தொழிலதிபர். அவருக்கு நான் ஆறு வயதில் இருக்கும்போதே மதுபானசாலை அனுமதி பத்திரம் இருந்தது. எனக்கு 17 வயதாகும் போது எனது தந்தையாருக்கு நான்கு மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரம் இருந்தன. யுத்தகாலத்தில் அவை இயங்காத நிலையில் புதுப்பிக்கப்படாமல் இருந்தன. நீண்டகாலமாக இயங்காத மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் செய்வதற்கு, அப்போதைய அரச கொள்கைகளுக்கமைய சட்ட ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் 2021ம் ஆண்டு மதுபான சாலைகளுக்கான புதிய அனுமதிகள், மற்றும் பழைய அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் தொடர்பான அரச கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து, எனது தந்தையாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே இருந்த மதுபான சாலைகள் இரண்டினை புதுப்பிக்க மேல்முறையீடு செய்யப்பட்டு அதில் ஒரு அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது மற்றையது பரிசீலனையில் உள்ளது.

இவற்றை பெறுவதற்கு எனது சிபார்சினை எனது தந்தையார் எந்த ஒரு மதுபான சாலை அனுமதிக்காகவும் கோரவில்லை. அவை அரசு சுற்றுநிரூபத்துக்கமைய தகுதி உள்ளது என்று தீரமானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

எனவே எம்மிடம் இவ்வாறான அனைத்து ஆதாரங்களும் உள்ள போதிலும் சிலர் தமது சுயலாபத்திற்காக வாய்க்கு வந்தபடி உளறி வருகின்றனர். இவ்வாறானவர்களின் சுயலாப அரசியல் நோக்கத்திற்கான இத்தகைய பொய் குற்றச்சாட்டுகள் எதிர்காலத்திலும் திட்டமிட்டு பரப்பப்படுமானால், பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு இவ்வாறு பொய் குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்கள் அதனை ஆதாரத்தோடு முன் வைத்தால் அரசியலில் இருந்து அந்தத் தருணமே விலகுவேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

ஒரு சிலர் தாங்கள் வாய் வீரர்கள் என்பதனை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அவர்களால் ஒருபோதும் செயல் வீரர்களை வீழ்த்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *